Tuesday, February 20, 2007

Herbal of the day - இன்று ஒரு மூலிகை - அகில்


அகில்
வேறு பெயர்கள்:
அகரு, அகருகட்டை, அகிற்கட்டை, பூழில், காகதுண்டம்.
இது பெரிய மர வகுப்பைச் சேர்ந்தது. இஃது இமயத்தின் கீழ்நாடு, அஸ்ஸாம், பூட்டான், மற்றும் தெற்குப் பகுதிகளில் வளர்கின்றது.
பயன்படும் உறுப்புகள்:
கட்டை, பிசின்.

சுவை:
கார்ப்பு, கைப்பு, சிறு இனிப்பு.

தன்மை:
வெப்பம்

பிரிவு:
இனிப்பு

செய்கை:
வெப்பமுண்டக்கி
பித்தநீர்பெருக்கி
வீக்கமுருக்கி
குணம்:
நாசி யடைப்பு நவிரவிடி தாளுநோய்
வீசு நமைப்புடகள் விட்டேகும்-பேசில்
சுகரு மயங்குந் துணைமுலையாய்!-நல்ல
அரு மரத்தா லறி.
-அகத்தியர் குணவாகடம்

தளர்ந்த விருத்தருக்காந் தக்க மணத்தால்
உளந்த சுரமனைத்து மோடும்-வளர்ந்திழும்
மானே! அகிற்புகக்கு வாந்திய ரோசகம்போம்
தானே தளர்ச்சியுறுஞ் சாற்று.

-அகத்தியர் குணவாகடம்


பொருள்:
அகருக் கட்டையினால் மூக்கடைப்பு, தலைகுத்து, வாதம், நமைப்புடைகள், சிற்சில சுரம், வாந்தி, அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும். தளர்ந்த உடல் இறுகும்.

மேலும்,
அகிற்கட்டையை நீர் விட்டுச் சந்தனம் போலரைத்து, உடலில் பூசிக்கொண்டுவர, தளர்ந்த உடல் இறுகும்.
இதன் புகை மணத்தால் சிற்சில சுரவெப்பம் நீங்கும்.

அகில் கட்டையைப் புகைத்து முகரினும், அல்லது இக் கட்டையின் புகை மேல் படும்படி செய்யினும், அயர்ச்சி, வாந்தி, சுவையின்மை தீரும். இதைப் புண்களுக்கும் புகைக்கலாம்.

இக் கட்டையாலாக்கிய தூள் ஆண்மைப் பெருக்கத்துக்காக செய்யப்படும் சில மருந்துகளில் சேருகிறது.

அகிற்கட்டைத் தைலத்தை முடித்தைலமாகப் பயன்படுத்த, நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் நீங்கும்.

அகிற்கட்டைத் தைலம்:
அகிற்கட்டைக் குடிநீர், நல்லெண்ணெய், பசுவின்பால் வகைக்கு 1.3 லிட்டர் எடுத்து ஒன்று கூட்டி அத்துடன் அதிமதுரம், தான்றிக்காய்த்தோல் வகைக்கு 35 கிராம் எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் தைலம் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ளவும்.

1 comment: